மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்


இப்பயிலரங்கில் மாநிலத்தின் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலிருந்து 50க்கும் அதிகமான இதயவியல் மருத்துவர்கள் பங்கேற்பு. 

அடைபட்டுள்ள கரோனரி தமனிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறைகளுள் ஒன்றான சருமத்து ஊடாக மேற்கொள்ளப்படும் கரோனரி இடையீட்டு சிகிச்சை (PCI) மீது நடைபெறும் மாநாட்டின் ஒரு அங்கமாக இப்பயிலரங்கு நடத்தப்பட்டது. 


மதுரை, 11 ஏப்ரல் 2022*: இதய நோய்கள், வால்வு குறைபாடுகள், இதயத்தின் கட்டமைப்பு ரீதியிலான கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பு, இதயவியலின் ஒரு அங்கமான  இடையீட்டு சிகிச்சை நிபுணர்களுக்காக பயிலரங்கை ஒரு நாள் நிகழ்வாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) நடத்தியது. அடைபட்டுள்ள கரோனரி தமனிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறைகளுள் ஒன்றாக சருமத்து ஊடாக மேற்கொள்ளப்படும் கரோனரி இடையீட்டு சிகிச்சை (PCI) இருந்து வருகிறது. இந்த இடையீட்டு சிகிச்சையில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் மீது நிபுணர்களது சிறப்புரைகளும் மற்றும் இச்சிகிச்சையை செய்வது குறித்து ஐந்து நேரடி செயல்முறை விளக்க நிகழ்வுகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. 


இடையீட்டு இதயவியல் சிகிச்சை மீது ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவரும் PCI எக்ஸோடிகா என்ற மாநாட்டின் ஒரு அங்கமாக இப்பயிலரங்கு நடத்தப்பட்டது. இம்மாநிலத்தில் 10க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 50 இதய சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்றனர்.


இரு அமர்வுகளாக நடத்தப்பட்ட இப்பயிலரங்கில் இடையீட்டு இதயவியல் சிகிச்சை பிரிவில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான கொலம்பியா யுனிவர்சிட்டி இர்விங் மெடிக்கல் சென்டரின் மருத்துவ பேராசிரியராக இருக்கும் டாக்டர். அஜய் ஜே. கீர்த்தனே, எம்டி, சிறப்புரையாற்றினார். அதிக சிக்கலான கரோனரி மற்றும் வெளிப்புற நாள நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையில் இவர் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக சமீபத்திய நவீன தொழில்நுட்பம், புத்தம் புதிய உத்திகள் மற்றும் நுட்பமான சிகிச்சை மேம்பாடுகள் ஆகிய தலைப்புகள் மீது இந்நிகழ்வில் நடத்தப்பட்ட சிறப்புரைகளும் மற்றும் நேரடி செயல்முறை விளக்கங்களும் அமைந்திருந்தன. இதயத்தில் கதீட்டர் பொருத்துதல், கதீட்டர் வழியாக பெருநாடிவாயில் (வால்வு) மாற்றுதல் ஆகியவை இவற்றுள் சிலவாகும்.


MMHRC-ன் இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். சிவகுமார் இப்பயிலரங்கில் நெறியாளராக பங்களிப்பை வழங்கினார், அவர் இது தொடர்பாக கூறியதாவது: “உலகமெங்கிலும் இதய நோய்களின் பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தாலும் கூட, இடையீட்டு இதயவியல் சிகிச்சையில் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் அதிவிரைவான முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த முன்னேற்றங்களினால் நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரமும், இதய பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுவதையும் காண முடிகிறது. இருந்த போதிலும், இந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதில் சிறந்த செயல்முறைகள் பற்றி கற்றுக்கொள்ளவும் மற்றும் அவற்றை பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு செயல்தளத்தை உருவாக்குவது இத்தருணத்தில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தற்போது நடத்தப்பட்ட இந்த பயிலரங்கு இது குறித்த அறிவை பகிர்ந்துகொள்கிற கல்வி சார்ந்த ஒரு நிகழ்வாக பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதிப்பு நேர்வு அடிப்படையிலான கற்றல் மற்றும் PCI தொடர்பான அதிக சிக்கலான நேர்வுகள் மீது ‘ஆசானிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ (learn from the master) அமர்வுகள் பங்கேற்பாளர் அனைவருக்கும் பயன் தருவதாக இருந்தன.” 


PCI என்பது ஒரு மெல்லிய நெகிழ்வுத்திறனுள்ள குழாயை (கதீட்டர்) பயன்படுத்தி ஸ்டென்ட் என அழைக்கப்படும் ஒரு சிறிய கட்டமைப்பை நிலைநிறுத்துகிற ஒரு அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சை செயல்முறை என்று அவர் விளக்கமளித்தார். படிமங்கள் இதயத்தில் சேர்வதால் அடைபட்டுள்ள இதயத்தின் இரத்த நாளங்களை திறப்பதற்கு இச்செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சையானது இரத்த ஓட்டத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும்; இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதத்திற்கான இடர்வாய்ப்பை அகற்றுகிறது. இடையீட்டு இதய சிகிச்சை நிபுணர்கள் இதயத்திலுள்ள துளைகளை சரிசெய்யவும் மற்றும் இதயத்தில் சிறப்பு சாதனங்களை பொருத்தவும் PCI-ஐ பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளியின் இதயம் முறையாக இயங்க வைக்கப்படுகிறது. 


PCI எக்ஸோடிகா மாநாடு 5D என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது: வரையறுத்தல் (define), வடிவமைத்தல் (design), மற்றும் நேரடி சிகிச்சை செயல்முறைகள் மீதான செயல்முறை விளக்கம் மற்றும் விவாதம் வழியாக சிக்கலான PCI-ஐ வழங்குதல் என்பவையே அவை. பல்வேறு மையங்களிலிருந்து 8 நேரலை நேர்வுகளும் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து 8 நேரலை நேர்வுகளும் இச்செயல்முறை விளக்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமாகிராஃபி வழியாக கரோனரிக்கு இடையிலான இமேஜிங் போன்ற மிக நவீன தொழில்நுட்பங்கள், கரோனரிகளில் பாய்வு இயக்கவியல் மதிப்பீடு, கால்சிய படிமங்களுள்ள கரோனரிகளில் அடைபட்டுள்ள சிரையை திறக்க சுழலக்கூடிய கத்தியை (ரோட்டாபிளேஷன்) பயன்படுத்துவது மற்றும் அதிக இடர் ஆபத்துள்ள ஆஞ்சியோபிளாஸ்டிக்கு மெக்கானிக்கல் சுழற்சி ஆதரவு போன்ற அம்சங்கள் மீது கொச்சி மற்றும் சென்னை மற்றும் அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்கள் வழங்கிய ‘லைவ்-இன்-பாக்ஸ்’ பிரசன்டேஷன்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன. 

நாளை நிறைவடையவிருக்கும் இம்மாநாட்டில் 200-க்கும் அதிகமான இதய சிகிச்சை நிபுணர்கள் நேரடியாக பங்கேற்பார்கள் என்றும், உள்நாட்டளவிலும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 5000 இதயவியல் நிபுணர்கள் ஆன்லைன் வழிமுறையில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்