ALL Business Minutes ERODE Maduai Coimbatore
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
July 28, 2020 • madurai minutes

மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் 'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்'  என்ற தலைப்பில் மெய்நிகர் காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தர்மத்துப்பட்டி ஏ.எச்.எம்.டிரஸ்ட், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்(பெரியகுளம்) மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஒருங்கிணைப்போடு இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

 

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து கருத்துரை ஆற்றிய மருத்துவர் பாமா ரவிக்குமார், நமது உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது என்றும், பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றம் நமது உடலிலும் பிரதிபலிக்கும் என்றார். ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை, நோய்வாய்பட்டிருக்கும் பகுதிக்கு கொண்டு சென்று சரிசெய்வதற்கு உதவுவது யோகாவின் பங்கு ஆகும் என்றார். தற்போதைய கொரோனா தொற்று, மூக்கிலிருந்து தொடங்கி, தொண்டையில் இறங்கி கடைசியில் நுரையீரல் வரை சென்று தாக்குகிறது என்றும் மூக்கிலிருக்கும் தொற்றை ஜலநேர்த்தி (ஒரு மூக்கின் வழியாக உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை விட்டு மறுமூக்கின் வழியாக வரவைப்பது) நிவர்த்தி செய்யலாம் என்றும் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரை வாய்கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் இருக்கும் தொற்றை அகற்றி நுரையீரலுக்கு செல்லாமல் தடுக்கலாம் என்றும், நுரையீரல் தொற்றை மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா மூலமாக சரிசெய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.  இதற்கான ஆசனங்களான தடாசனம் உள்ளிட்ட ஆசனங்களையும் மூச்சு பயிற்சிகளையும் செய்து காட்டி விளக்கினார்.

 

மின்னணு மோசடிகள் என்ற தலைப்பில் பேசிய சவுத் இந்தியன் வங்கியின் நிதி சார் ஆலோசகர் திரு சின்னதுரை, ஏடிஎம் கார்டு நம்பரையும், OTP நம்பரையும் மற்றும் சிவிவி நம்பரையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், அப்படி பகிர்ந்தால் நமது வங்கிக் கணக்கில் பணம் பறிபோக வாய்ப்பு இருக்கிறது  என்றார். நாம் பயன்படுத்தக்கூடிய வெப் பிரௌசர் பாதுகாப்பான ஒன்றா என்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது என்பதையும் வருமானவரி போன்றவற்றை சரியான வருமான வரி தளம் சென்று கட்டவேண்டும் என்றும் வருமானவரி தள்ளுபடி செய்கிறோம் என்று வரும் வலைத்தளங்களை புறம் தள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நீங்கள் அதிர்ஷ்ட பரிசு வென்றிருக்கிறீர்கள் என்று வரும் குறுந்தகவல்களுக்கும் பதில் அளிக்கக்கூடாது என்றார். போன் பே மற்றும் கூகுள் பே போன்ற UPI-களைப் பயன்படுத்தும் போது போலி அஞ்சல் ஐடி-களைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

 

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு இணை இயக்குனர் காமராஜ், கொரோனா காலத்தில் நமது அரசும், சர்வதேச அரசுகளும் மக்களைக் காக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்த கருத்தரங்கில் பங்குபெற்றிருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்; அவர்கள் வாழுகின்ற கிராமம் அல்லது நகரத்தில் குறைந்தபட்சம் பதினைந்து நபர்கள் முதல் ஐம்பது நபர்களுக்கு இதைப்பற்றி சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். அரசு, தொலைக்காட்சிகள் மற்றும் இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலமாக என்னதான் கூவி கூவி அறைகூவல் விடுத்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது என்றார். மாவட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களும் நடைபெற்று வருகின்றன, சித்த மருத்துவத்திலும் கபசுரகுடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் போன்ற விஷயங்களையும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.  இதன் தொடர்ச்சியாக, மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலமாக கொரோனா தொற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்ற தலைப்பில் இந்த வலையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இயற்கை மருத்துவம் என்பது பஞ்ச பூதங்களின் அடிப்படையில் அமைந்த நம் உடம்பை, நம்மிடம் இருப்பவற்றை வைத்தே மருந்துகள் இல்லாமல் குணப்படுத்துவது எப்படி என்பதாகும் என்று குறிப்பிட்டார். வீடுகளில் இருந்தே வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இத்தருணத்தில் நாம் நம் பணத்தை இழக்காமல் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை எடுத்துரைப்பதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.    

 

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கு ஏற்பாடுகள் செய்து, வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார்.

 

தேனி மாவட்டத்தைச் சார்ந்த திரளான பொதுமக்கள், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக பெருமக்கள், தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்ட நேரு யுவ கேந்த்ரா உதவி இயக்குனர்கள் மற்றும் இளைஞர்கள், வங்கி அலுவலர்கள் இக்காணொலி கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.